இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பயணி ஒருவரின் சூட்கேஸை சோதனை செய்ததில் இந்திய வனத்துறையால் தடை செய்யப்பட்ட 26 அரிய வகை பச்சை பாம்புகள் அதில் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் அந்தப் பயணியிடம் விசாரணை செய்தபோது இலங்கை விமான நிலையத்தில் புறப்படும் போது ஒரு நபர் தன்னிடம் இந்த பெட்டியில் சாக்லேட் இருப்பதாகவும் இதனை திருச்சி விமான நிலைய வாசலில் இருக்கும் தனது உறவினரிடம் கொடுக்குமாறு கூறியதாக தெரிவித்தார்.
சூட்கேசில் இருந்த பாம்புகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து இலங்கை வழியாக திருச்சிக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து வன அலுவலர்கள் விமான நிலையம் விரைந்து வந்து பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகளை ஆய்வு செய்து கடத்தி வரப்பட்ட பாம்புகள் தாய்லாந்து வனப்பகுதியில் வாழக்கூடிய கடும் விஷம் கொண்ட வகை பாம்புகள் எனவும் ஒரு பாம்பின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் என்றும் இந்தியாவில் இவ்வகை பாம்புகள் தடை செய்யப்பட்டு இருப்பதையும் தெரிவித்தனர். இதனையடுத்து கடத்தி வந்த பயணியுடன் அவற்றை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை சுங்கத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.