திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகேயுள்ள அளுந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். விவசாயியான இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை அங்குள்ள காட்டுப் பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். அப்போது தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை இரண்டு பேர் சேர்ந்து பிடித்து ஒரு காரில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் வேகமாக சென்று எதற்காக ஆட்டை பிடித்து காரில் ஏற்றுகிறீர்கள் என்று கேட்டதற்கு பதில் ஏதும் கூறாமல் காரை எடுத்துக்கொண்டு தப்பி செல்ல முயன்றனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் காரில் இருந்தவகளை பிடித்து வைத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த மணிகண்டம் காவல் நிலைய போலீசார் ஆட்டை திருடியவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள் சமயபுரம் கண்ணனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (32) அவரது மனைவி விஜயஜெரிதா (31) என தெரியவந்தது. மேலும் இவர்கள் தங்களது காரை எடுத்துக் கொண்டு சாலையோரமாக மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை திருடிச் செல்வதை தொழிலாக செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் வழக்குப்பதிவு செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்