ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் ரவி. இவர் ஐதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சாய்பிரியா (வயது 22) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை 26-ந்தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் சாய்பிரியா விசாகப்பட்டினத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து இருந்தார். திருமண நாளையொட்டி ரவி கடந்த 25-ந் தேதி மாமியார் வீட்டிற்கு வந்தார்.
மறுநாள் திருமண நாளை கொண்டாடும் விதமாக தனது மனைவி சாய்பிரியாவுடன் வைசாக் கடற்கரைக்கு சென்றனர். இருவரும் கடலில் குளித்தபடி விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது சாய்பிரியா சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கி வருமாறு கணவரிடம் கூறினார். இதையடுத்து ரவி உணவு பொருட்களை வாங்கி வருவதற்காக சென்றார். பின்னர் திரும்பி கடற்கரைக்கு வந்தபோது சாய்பிரியா திடீரென காணாமல் போனார். இதனைக் கண்டு திடுக்கிட்ட அவர் கடற்கரை முழுவதும் தனது மனைவியை தேடினார். மாமியார் வீட்டுக்கு போன் செய்து கேட்டபோது சாய்பிரியா வீட்டிற்கு வரவில்லை என தெரிவித்தனர். இதுகுறித்து ரவி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர்கடற்கரைக்கு வந்து படகுகள் மூலம் சாய் பிரியாவை தேடினர். மேலும் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு விடிய விடிய விசாகப்பட்டினம் கடல் மற்றும் கடற்கரை முழுவதும் தேடினர். ஆனால் சாய்பிரியாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சாய்பிரியா தனது பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தார். அதில் நெல்லூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்தேன். ஆனால் ரவியுடன் எனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததால் அவருடன் வாழ பிடிக்கவில்லை.
தற்போது காதலனுடன் பெங்களூரில் இருப்பதாகவும் தன்னை தேட வேண்டாம் என கூறியிருந்தார். படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலமும் விடிய விடிய அவரை தேடியதால் ரூ.1 கோடி வரை செலவு ஏற்பட்டுள்ளது. பொய் புகார் அளித்ததால் நஷ்டஈடு தொகையாக ரூ.1 கோடி தருமாறு அதிகாரிகள் பெண்ணின் பெற்றோருக்கு நோட்டீஸ் வழங்கினர். அதற்கு அவர்கள் தன்னுடைய மகள் காதலனுடன் ஓடியது தெரியாமல் மருமகன் போலீசில் புகார் தெரிவித்தார். புகாருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தனர். இந்த சம்பவம் விசாகப்பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.