மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தீராம்பாளையம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 90). இவரது மகன் ராமசாமி (70). இவருக்கு மகேந்திரன், தங்கராசு என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ராமசாமிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு ராமசாமி மது குடிப்பதற்காக மகன்களிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணம் தர முடியாது என கூறி, அவரை கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த ராமசாமி வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை தண்ணீரில் கலக்கி குடித்துவிட்டு மீதியை அருகில் வைத்திருந்ததாக தெரிகிறது.
இதனிடையே செல்லம்மாள் தண்ணீரில் விஷம் கலந்து இருப்பது தெரியாமல், அதனை தண்ணீர் என நினைத்து எடுத்து குதித்துள்ளார். விஷம் குடித்த தாயும், மகனும் சிறிது நேரத்திலேயே மயங்கினர். இதனை கண்ட குடும்பத்தினர் இருவரையும் மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு செல்லம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ராமசாமி மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார் ராமசாமி
இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குடிப்பழக்கத்தால் தாயும் மகனும் அடுத்த அடுத்த நாள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
