திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் திவ்யா, மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா, துர்கா தேவி, ஆண்டாள் ராம்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாநகராட்சியின் மொத்த பணிகளும் கணினி மாயமாக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். தொகுப்பூதிய மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.14,000 மற்றும் அகவிலைப்படி உயர்த்தி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் திருச்சி மாநகராட்சியில் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட 65 வார்டு பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வார்டுக்கு தலா 25 வீதம் 5 மண்டலங்களுக்கும் மொத்தம் 1,625 எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்துவது, சலூன் கடை, பியூட்டி பார்லர், மசாஜ் சென்டர், ஸ்பா (அழகுநிலையம்) தவிர்த்து சலவைத் தொழில், கற்பூரம் தயாரித்தல், தோல் பதனிடும் தொழில், மீன் எண்ணெய் செய்தல், செங்கல் காளவாய், சுண்ணாம்பு காளவாய், சுருட்டு தயாரித்தல், பீடி தயாரித்தல், டீ, காபி ஆகியவற்றை கேன் மூலம் விற்பனை செய்தல், வியாபார நோக்கில் செயல்படும் தங்கும் விடுதிகள், மதுபான கடையில் வைத்திருக்கும் பலகாரம், இட்லி, தோசை கடை, மிட்டாய் கடை, குளிர்பானம் விற்பனை கடை, மிதிவண்டி விற்பனை கடை, மருந்தகங்கள், தையல் கடைகள், சாக்கு பை மண்டிகள், பரிசோதனை நிலையங்கள்உள்ளிட்ட 126 தொழில்களுக்கான உரிமையாணை (லைசென்ஸ்) கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டு உயர்த்துவது என தீர்மானிக்கப்பட்டது. மேற்கண்ட தொழில்களுக்கு கடந்த 2000 ஆவது ஆண்டு முதல் இருந்த லைசன்ஸ் கட்டணம் தற்போது திருத்தி உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நெல் அவித்தல் உரிமை கட்டணம் முன்பு ரூ.500 ஆக இருந்தது. தற்போது ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. செங்கல் காளவாய் லைசன்ஸ் கட்டணம் ரூ.500 லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.