திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் அப்பருக்கு அமுது அளிக்கும் அப்பர் கட்டம் திருவிழா நடைபெற்றது

திருநாவுக்கரசருக்கு இறைவன் பொதிசோறு கொடுத்தருளிய தலம் திருப்பைஞ்ஞீலி. திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய சிவத்தலங்களை தரிசித்துவிட்டு திருநாவுக்கரசர், திருப்பைஞ்ஞீலி நோக்கி சென்று கொண்டிருந்தார். வழியில் நீர்வேட்கையும், பசியும் அவரை வாட்டின. எனினும் மனம் தளராமல் திருப்பைஞ்ஞீலி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் களைப்பைப் போக்க எண்ணிய இறைவன், அவர் வரும் வழியில் ஒரு குளமும் தங்கி இளைப்பாற ஒரு சோலையையும் உருவாக்கி கட்டுச்சோறு வைத்துக் கொண்டு முதிய அந்தணர் உருவத்தில் காத்திருந்தார். களைத்து வந்த அப்பருக்கு தன்னிடம் உள்ள பொதிச்சோற்றை உண்டு குளத்து நீரைப் பருகும்படி கூற அப்பரும் ஒன்றும் கூறாமல் உண்டு களைப்பாறினார். பிறகு இருவரும் பேசிக்கொண்டே திருப்பைஞ்ஞீலி ஆலயம் வந்தனர்.

கோயில் அருகே வந்தவுடன் அந்தணர் மாயமாய் மறைந்து விடவும் அப்பர் அந்தணரைக் காணாது திகைத்து நின்றார். அப்போது சிவபெருமான் பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்தார். அப்பர் இறைவனின் கருணையை வியந்து பதிகம் பாடிப் போற்றினார்.

இந்நிகழ்வை நினைவுறுத்தும் வகையில் இக்கோயிலில் "சோற்றுடை ஈஸ்வரர்' சந்நிதி அமைந்துள்ளது. திருநாவுக்கரசருடன் அந்தணராக வந்த சிவபெருமான் மறைந்து போனதும் பின்னர் ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்தருளியதும் இவ்விடமே.

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் அவிட்டம் நட்சத்திர நாளில் இச்சந்நிதியில் திருநாவுக்கரசருக்கு சோறு படைத்த விழா நடைபெறுகிறது. 

Post a Comment

Previous Post Next Post