திமுக எம்.எல்.ஏ.வை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டம்

 


வையம்பட்டி அருகே வாக்குப்பதிவு மையத்துக்குள் நுழைந்த எம்.எல்.ஏ.வை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாற்றி வாக்களித்ததாக புகார்
திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் 6-வது வார்டுக்கான ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அந்த வார்டுக்கு உட்பட்ட மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர்.

இந்நிலையில் வடக்கு தோப்புப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி எண் 37-ல் ருக்மணி (வயது 80) என்ற மூதாட்டி வாக்களிக்க சென்றுள்ளார். அப்போது, அவர் வயது முதிர்வு காரணமாக தள்ளாடியதால் வாக்களிக்க உதவிக்கு அங்கு இருந்த அலுவலரை அழைத்துள்ளார். அப்போது, அந்த அலுவலர் மூதாட்டி கூறிய சின்னத்திற்கு வாக்களிக்காமல் மற்றொரு சின்னத்திற்கு வாக்களித்து விட்டதாக தெரிகிறது. இதுபற்றி தி.மு.க.வினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் செய்தனர். இதுகுறித்து வாக்குச்சாவடி மைய அலுவலர்களிடம் விளக்கம் கேட்க மனிதநேய மக்கள் கட்சியின் மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ. அப்துல் சமது மற்றும் தி.மு.க.வினர் சிலரும் சென்றதாக தெரிகிறது.

இதை அறிந்த அ.தி.மு.க.வினர், வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க.வினரை அனுமதியின்றி எவ்வாறு வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்ல அனுமதிக்கலாம். அத்துமீறி நுழைந்த அவர்கள்  மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாக்குச் சாவடி மையத்தின் முன்பு தரையில் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுதத்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஆறுமுகம் மற்றும் போலீசார் போராட்டத்தில்  ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Post a Comment

Previous Post Next Post