திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவல் அருகே கொள்ளிடம் ஆற்றில் தாளக்குடி அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் புதுக்கோட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் அரசு அனுமதி உடன் நடத்தி வருகிறார்.
இந்த குவாரியில் அரசு அனுமதித்த டோக்கனை விட அதிக லாரிகள் மணல் அள்ளுவதாக குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில் இரண்டு கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் கொள்ளிடம் மணல் குவாரி மற்றும் மணல் இருப்பு வைத்திருக்கும் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கொள்ளிடம் கரையின் மறுபுறம் தாளக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியிலும் மற்றொரு அதிகாரி குழு சோதனை செய்து வருகின்றனர்.
அதிகாரிகள் சோதனையின் போது மத்திய துணை ராணுவ படையை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மணல் குவாரியில் இரண்டு பொக்லின் மட்டும் உள்ள நிலையில் அதிகாலையில் நான்குக்கு மேற்பட்ட பொக்லின் இருந்துள்ளது. மணல் குவாரியில் சட்டவிரோதமாக எவ்வளவு பணம் இருக்கிறது என்பது குறித்தும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படை பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் அரசால் தாளக்குடி, மாதவ பெருமாள் கோவில், கூகூர் பகுதிகளில் குவாரிகள் அமைக்கப்பட்டு மணல் அள்ளப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையிலான லாரிகளில் மணல் அள்ள வேண்டும். அதை தாண்டி 1000க்கணக்கில் லாரிகள் மூலம் அள்ளப்பட்டுள்ளது அமலாக்கதுறை சோதனையில் தெரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசுக்கு வருவாய் வரமால் யாருக்கு இவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை சேகரித்து அமலாக்கதுறை அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகி வருகின்றனர்.