திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தெற்கு தத்தமங்கலம் குடித்தெரு பகுதி சேர்ந்தவர் தியாகராஜன். இவர் மதுரையில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி கிருத்திகா மற்றும் குழந்தைகள் குடித்தெருவில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் பள்ளிக்கூடம் சென்ற தனது மகனை அழைத்து வர கிருத்திகா வீட்டை பூட்டி விட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு போட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதைத்தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 ஆண்ட்ராய்டு டேப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக கிருத்திகா சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவாணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பட்டப்பகலில் வீடு புகுந்து நகை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.