தஞ்சாவூர் மாவட்டம் தொண்டராயன்பாடி ஐயனாபுரம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த சார்லசின் மகன் ஜெஸ்டின் ஸ்டாலின்(வயது 31). ஓட்டல் மேனேஜ்மெண்ட் பட்டயபடிப்பு படித்துள்ள இவர், தஞ்சாவூர் பூதலூரில் உள்ள சாமியானா பந்தல் போடுகிற கடையில் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சாமியானா பந்தல் உரிமையாளரின் வீடு திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே உள்ளது. அவரது உறவுக்காரரின் 16 வயது மகள் ஒருவர் பிளஸ்-1 படித்து வருகிறார். ஜெஸ்டின் ஸ்டாலின், சரக்கு வேனில் பொருட்களை ஏற்றிக்கொண்டு திருச்சிக்கு வந்துள்ளார். அப்போது, பிளஸ்-1 மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைக்கூறி அவருடன் ஜோடியாக புகைப்படம் எடுத்துள்ளார். இந்நிலையில், மாணவி தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும், அதேபோல ஜெஸ்டின் ஸ்டாலினையும் காதலிக்க முடியாது என்றும் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த ஜெஸ்டின் ஸ்டாலின், மாணவியுடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மாணவியின் உறவினர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார். அதை மாணவியின் பெற்றோர், உறவினர்கள் தட்டிக்கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் தாய், திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், ஜெஸ்டின் ஸ்டாலின் மீது போக்சோ சட்டம் மற்றும் ஐ.டி. ஆக்ட் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்