நூல் விலை உயர்வை கட்டுபடுத்தக்கோரி டெல்லியில் உண்ணாவிரதம்- திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் முடிவு

 

பின்னலாடை துறையின் முக்கிய மூலப்பொருளாக நூல் உள்ளது. பருத்தி பஞ்சு விலையேற்றம் காரணமாக கடந்த 18 மாதங்களாக நூல் விலை உயர்ந்து வருகிறது. மாதந்தோறும் நூல் விலை அதிகரிப்பால் புதிய ஆர்டர்களை எடுப்பதில் பின்னலாடை துறையினர் தயக்கம் காட்டி வருகிறார்கள். நூற்பாலை சங்கத்தினர் மாதந்தோறும் 1 -ந் தேதி நூல் விலையை அறிவிப்பது வழக்கம்.அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்த்தப்பட்டது. இது பின்னலாடை தொழில்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து டீமா சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:-

கடந்த 18 மாதங்களில் ஒரு மாதத்தில் மட்டும் நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது. மற்ற மாதங்களில் தொடர்ந்து விலையேற்றம் செய்யப்பட்டது. ரூ.30 லட்சம் கோடி இந்தியாவில் ஏற்றுமதி வர்த்தக இலக்கு அடைந்து விட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால் பின்னலாடை தொழில் குறைந்து வருகிறது.

திருப்பூரை பொறுத்தவரை 90 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் பின்னலாடை உற்பத்திக்கு ஒவ்வொரு துறையையும் சார்ந்தே உள்ளனர். பஞ்சில் இருந்து நூல் தயாரித்து ஆடை உற்பத்தியாவது வரை பல்வேறு ஜாப்ஒர்க் நிறுவனங்கள் மூலமாக பின்னலாடைகள் உற்பத்தி நடக்கிறது.

10 சதவீத நிறுவனங்கள் மட்டுமே பஞ்சில் இருந்து நூல் தயாரிப்பது முதல் ஆடை தயாரிப்பு வரை அனைத்தையும் ஒரே இடத்தில் செய்கிறார்கள். தற்போது நூல் விலை உயர்வு இருந்தாலும், இது போன்ற 10 சதவீத நிறு வனங்கள் மட்டுமே தொழில் செய்ய முடியும். மற்றவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. திருப்பூரில் 20க்கும் மேற்பட்ட பின்னலாடை அமைப்புகள் உள்ளன.

ஒவ்வொரு அமைப்பில் இருந்தும் 25 பேர் வீதம் என மொத்தம் 500 பேர் டெல்லி சென்று பிரதமர், ஜவுளித் துறை மந்திரியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

பஞ்சை மூலப்பொருளாக கொண்டு செயல்படும் நூற்பாலைகள் முதல் பின்னலாடை நிறுவனங்கள் வரை அனைவரும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கும் வகையில் திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம் குறித்து ஒருங்கிணைந்து வருகிறோம்.

பஞ்சுக்கு உண்டான இறக்குமதி வரி 11 சதவீதத்தை குறைக்க வேண்டும். பஞ்சு ஏற்றுமதிக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும். உள்நாட்டு தேவைக்கு போக மீதம் உள்ள நூலை ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. ஜவுளித்தொழிலை பாதுகாக்க நிரந்தர முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post