நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை மிரட்டுவது ஜனநாயகமா? மதம் தவிர பாஜக எதையும் பேசுவதில்லை. மக்கள் பிரச்சனைக்காக பாஜகவினர் வீதியில் இறங்கி போராடியதுண்டா?
இந்த ஆட்சியாளர்கள், குறிப்பாக திமுக ஆட்சி செயல் அரசியலை, மக்களுக்காக சேவை அரசியலை செய்வதில்லை, செய்யாது. வெறும் செய்தி அரசியல்தான் செய்கிறது. ஸ்டாலின் சைக்கிள் ஓட்டிப் போனார், தேநீர் கடையில் தேநீர் குடித்தார், மாணவப் பிள்ளைகளை தட்டிக்கொடுத்தார், அங்கே நின்றார், இங்கே போனார் என்றுதான் பேசினோம். செயல் என்ன?
மக்களை அழைத்து மனுக்களை வாங்கி பெட்டியில் போட்டு பூட்டி, சாவியை பாருங்கள் என கூறி, 100 நாளில் பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன் என்று கூறினார்கள். மனு கொடுத்தவர்களில், ஒரு பெண்கூடவா மதுக்கடைகளை மூடும்படி மனு கொடுக்கவில்லை? ஒருவர் கூடவா நீட் வேண்டாம் என்று சொல்லவில்லை? ஊழல், லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என ஒருவர் கூட கோரிக்கை வைக்கவில்லையா?
நாங்கள் அதில் 200க்கும் மேல் நிறைவேற்றிவிட்டோம், 300க்கும் மேல் நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்கிறார்கள். எங்கே நிறைவேறியிருக்கிறது?
இப்போது சமூக நீதிக்கான கூட்டமைப்பை உருவாக்குவதாக கூறுகிறார்கள். உருவாக்குகள். ஆனால் உங்களிடம் ஒரு கேள்வி. சாதிவாரி, குடிவாரி கணக்கெடுக்க உங்களுக்கு துணிவிருக்கிறதா? குடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். அதுதான் சம நீதி, சமூக நீதி. தமிழகத்தில் பல ஆண்டுகளாக இந்த கருத்தை டாக்டர் ராமதாஸ் மட்டுமே வலியுறுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
Tags:
தமிழகம்