திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் லாரி டிரைவர் குடும்பத்துடன் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது..
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக கலெக்டரிடம் கொடுத்தனர்.
இதேபோல் லாரி டிரைவரான முசிறி தண்டலை பகுதியை சேர்ந்த பெரியசாமி (வயது 40) 2 மகள், ஒரு மகன் ஆகியோரை அழைத்துக்கொண்டு மனு கொடுக்க வந்து இருந்தார்.
இந்தநிலையில் திடீரென்று அவர் தான் மறைத்து வைத்திருந்த 5 லிட்டர் மண்எண்ணெய் கேனை எடுத்து குடும்பத்தினர் மீதும், தனது மீது ஊற்றி தீ குளிக்க முயன்றார். இதனை பார்த்த போலீசார் மற்றும் ெபாதுமக்கள் பெரியசாமியிடம் இருந்த மண்எண்ெணய் கேனை பிடுங்கினர். மேலும் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர் அப்போது அவர் கூறும்போது, எனது மனைவி சுதாவை (35) துறையூரை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர் கடத்தி சென்றுவிட்டார். மீட்டு தரக்கோரி முசிறி போலீசில் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்காததால் குழந்தைகளுடன் வந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக கலெக்டர் சிவராசு விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.