பா.ம.க.விடம் இழப்பீட்டை வசூலிக்க எந்த தடையும் இல்லை- ஐகோர்ட்டு

 


மாமல்லபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரைத் திருவிழா நடத்தப்பட்டது. இந்த திருவிழாவில் கலந்துகொள்ள ஏராளமானோர் வாகனங்களில் வந்தனர். அப்போது மரக்காணம் அருகே இரு பிரிவினருக்கு இடையே கலவரம் ஏற்பட்டு, தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. அந்த கலவரம் காரணமாக பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.அதை கண்டித்து 2013-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி கிருஷ்ணகிரியில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு போக்குவரத்து கழகத்துக்குச் சொந்தமான பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன. இதில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை வசூலிக்க அரசு முடிவு செய்தது. இதுகுறித்து நடைபெறும் விசாரணைக்கு ஆஜராக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணிக்கு வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 17-ந்தேதி நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஜி.கே.மணி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பா.ம.க. போராட்டத்தின்போது சென்னையிலும், திருவள்ளூரிலும் 58 பஸ்கள், டாஸ்மாக் கடைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்திய பிறகே, இழப்பீடு நிர்ணயிக்கப்படும் என்பதால், அரசு தரப்பில் விசாரணைக்கு ஆஜராகும்படி பிறப்பிக்கப்பட்ட நோட்டீசுக்கு பா.ம.க. தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.தமிழ்நாடு பொதுச்சொத்து சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம், பொதுச் சொத்துககளை பாதுகாக்கவும், பொதுச்சொத்தை சேதப்படுத்துபவர்களிடம் இருந்து உரிய இழப்பை வசூலிக்க வேண்டும் என்ற நோக்கத்துகாக கொண்டுவரப்பட்டது, எனவே, நோட்டீசை ரத்து செய்ய முடியாது. மனுதாரர் விசாரணையில் கலந்துகொண்டு தன் தரப்பு நியாயத்தை அதிகாரிகளிடம் எடுத்துரைக்கலாம்.

ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல் உள்ளிட்டவைகளால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மக்களின் வரிப்பணத்தினால் வாங்கப்படும் பொதுச்சொத்துகளை அரசு பாதுகாக்க வேண்டும். அந்த சொத்துக்களுக்கு சேதம் அல்லது இழப்பு ஏற்படும்போது, அதற்கு அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.தமிழ்நாடு பொதுச்சொத்து சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம் 1992-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. 29 ஆண்டுகள் ஆகியும் இந்த சட்டத்தை அரசு தீவிரமாக அமல்படுத்தவில்லை. எனவே, இந்த சட்டத்தை அமல்படுத்தி, பொதுச்சொத்துகளை அரசு பாதுகாக்கவேண்டும்.இந்த வழக்கே கடந்த 6 ஆண்டுகளாக ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்துள்ளது. எனவே, இனியும் காலதாமதம் கூடாது. மனுதாரரிடம் 4 மாதங்களுக்கு அரசு விசாரணை நடத்தி முடிக்கவேண்டும். இந்த விசாரணைக்கு மனுதாரர் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி, பொதுச்சொத்துகள் சேதப்படுத்தும் நபர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கும் நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை முடித்துவைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post