தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு, மத்திய அரசின் கூடுதல் அரிசி, நாளை மறுதினம் முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.தமிழகம் உட்பட, நாடு முழுதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலையால் மக்கள் பாதிக்கப்பட்டனர்
இதனால், மே, ஜூன் மாதங்களில், முன்னுரிமை, அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஏற்கனவே வழங்குவதுடன், கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக, தலா, 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்குமாறு, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர்கள், நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோருக்கு, உணவு வழங்கல் துறை ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை, முன்னுரிமையற்ற கார்டுதாரர்களில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும், ஒருவருக்கு, 5 கிலோ வீதம், மே, ஜூன் இரு மாதங்களுக்கு, கூடுதல் அரிசியை இலவசமாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரிசி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மே மாதம் கூடுதலாக வழங்கப்பட வேண்டிய அரிசி, ஜூலை மாதத்திற்கு வழங்கப்படும் அரிசியுடன் சேர்த்தும்; ஜூன் மாதத்திற்கான ஒதுக்கீடு, ஜூன் மாத ஒதுக்கீட்டுடன் சேர்த்தும் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது