கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

 


அரபிக்கடலில் உருவாகி உள்ள டவ்தே புயலை தொடர்ந்து கேரளாவில் மீண்டும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கும், லட்சத்தீவிற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மற்ற 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்றுடன் மழையும், கடல் கொந்தளிப்பும் கூடுதலாக இருக்கும் என மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ள நிலையில் நாளை (திங்கட்கிழமை) பிற்பகல் முதல் இதன் தீவிரம் குறையும் என தெரிவித்துள்ளது.

இதற்கிடையே நேற்று கடல் சீற்றமாக இருந்தது. திருவனந்தபுரத்தில் வலிய துறை கடல் பாலம், கடல் கொந்தளிப்பு காரணமாக இடிந்து விழும் நிலையில் உள்ளது.

மேலும் பனத்துறை கடலோர கிராமத்தில் கடல்நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அதேபோல் தொடர் மழையால் கிள்ளியாறு, கரமனை ஆறு, நெய்யாறு ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் காலடி, கண்ணேற்று முக்கு, ஆற்றுக்கால், மேலாரன்னூர் உள்பட தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

காசர்கோடு முசோடி கடற்கரை பகுதியில் கடல் சீற்றத்தால் வீடுகள் சேதமடைந்தன. இந்த பகுதிகளில் வசித்து வந்த மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அதே சமயத்தில் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


Post a Comment

Previous Post Next Post