திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் ஒரேநாளில் மட்டும் 1,544 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 3 பெண் போலீசாருக்கு சளி, இருமல், காய்ச்சல் இருந்தது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தங்களை தனிமை படுத்திக் கொண்டனர்.
3 பெண் போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அங்கே அமைக்கப்பட்டுள்ள தகரக் கொட்டகையில் அமர வைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வருகின்றனர். இதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.