புதுடில்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில், இறந்தவர்களின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், தவறான யூகங்களைத் தவிர்க்க வேண்டும் என விமானப்படை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், தமிழகத்தின் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்திற்கு கடந்த டிச.,8ம் தேதி ஹெலிகாப்டரில் சென்றபோது திடீரென காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில், பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்து நடப்பதற்கு சில வினாடிகளுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது. மேலும், இந்த சம்பவம் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளும், சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விமானப்படையின் ஏர் மார்ஷல் மனவேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணை துவங்கியதாக பார்லி.,யில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பர் 8ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை விசாரிக்க முப்படை விசாரணை அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரும். அதுவரை, இறந்தவர்களின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், தவறான யூகங்களைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு விமானப்படை தெரிவித்துள்ளது.