நடனமாடி ரீல்ஸ் போட்ட பெண்கள் மீது வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீஸ்

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் திரைப்படப் பாடலுக்கு கவர்ச்சி உடையில் மூன்று பெண்கள் நடனமாடி வீடியோவை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தனர். 

கோட்டை ரயில் நிலையம், மக்கள் பயன்படுத்தும் படிக்கட்டு மற்றும் சரக்கு ரயில் நிற்கும் போது நடைபாதையில் நடனமாடி வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ வைரலாகி பேச பொருளானது. குறிப்பாக ரயில்வே பாதுகாப்பு சட்டத்தை மீறிய நிலையில் இதில் நடனமாடிய பெண்கள் யார் என்பது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட மூன்று பெண்கள் மற்றும் அதனை வீடியோ எடுத்த ஒரு ஆண் உள்ளிட்ட நான்கு பேர் மீது திருச்சி ரயில்வே காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 145, 147 பிரிவின் கீழ் தடையை மீறி வீடியோ எடுத்தது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரயில்வே காவல்துறையினர் அவர்களை அழைத்து பேசி இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடக் கூடாது என கண்டித்து அனுப்பியுள்ளனர். மேலும் பொதுமக்கள் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என ரயில்வே துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Post a Comment

Previous Post Next Post