இருக்கை உடைந்து படிக்கட்டு வழியாக ரோட்டில் தூக்கி வீசப்பட்ட நடத்துனர் ; அரசு பஸ்சின் அவல நிலை

திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வந்து கே.கே.நகர் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்டினார். நடத்துனராக திருச்சி எடமலைபட்டிபுதூரை சேர்ந்த முருகேசன் (54) பணியிலிருந்தார். அப்போது மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து கலையரங்கம் தியேட்டரை கடந்து சென்றது.

இந்த பேருந்தில் பயணிகள் அதிகம் இல்லாததால் கடைசியில் இருந்து வலது புறத்தில் உள்ள மூன்றாவது இருக்கையில் நடத்துனர் முருகேசன் உட்கார்ந்திருந்தார். மாநகரப் பேருந்துகளில் நடத்துனருக்கு என்று தனி இருக்கை கிடையாது. அந்த பேருந்து கலையரங்கம் தியேட்டரை கடந்து பத்திரிகை அலுவலகம் அருகே வலது புறம் திரும்பியது. அப்போது நடத்துனர் முருகேசன் அமர்ந்திருந்த இருக்கை திடீரென உடைந்து படிக்கட்டு வழியாக ரோட்டில் வந்து விழுந்தது. இதில் உட்கார்ந்து இருந்த நடத்துனர் முருகேசன் தூக்கி வீசப்பட்டார்.

இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், இது தொடர்பாக தீரன் நகர் டெப்போ கிளை மேலாளர், உதவி பொறியாளர் மற்றும் பராமரிப்பு பணியாளர் உள்ளிட்ட மூன்று பேருக்கு பொது மேலாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளார். மேலும் நடத்துனரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் ஏதும் தவறுதலாக இதில் செய்தியை பரப்பி இருந்தால் அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி கோட்ட பொது மேலாளர் முத்துகிருஷணன் தகவல் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Previous Post Next Post