லால்குடி அருகே திருமணம் முடிவு செய்தும் காதலனுடன் ஃபோனில் பேசிய மகளை கண்டித்த பெற்றோர் ; பெண் தற்கொலை

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நெருஞ்சலக்குடி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி. இவரது மகள் அன்பரசி ( 27). பிசியோதெரபி மருத்துமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் திருச்சி உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும், திருச்சியில் உள்ள வேறொரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஈரோடு வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இதுதெரியாமல் மகளுக்கு, பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். அப்போது அன்பரசி தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என காலம் தாழ்த்தி வந்தார்.

அதன் பின்னர் தான் மகளின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்தது. இந்த நிலையில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் அன்பரசி அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். பின்னர் பெற்றோரிடம் மாப்பிள்ளை பார்க்குமாறு கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பெற்றோர் அன்பரசிக்கு திருச்சியில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர். திருமணத்துக்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில் அன்பரசி மீண்டும் ஈரோடு வாலிபருடன் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதனை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த அன்பரசி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று முன் தினம் விஷத்தை குடித்து விட்டார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் அன்பரசி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post