திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்.. 31 வயதாகிறது.. தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும், டேவிட் என்பவரின் மகள் ரெஸ்பாகா என்பவருக்கும் என்பவருக்கும் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. ரெஸ்பாகாவுக்கு 25 வயதாகிறது.. 2 வீட்டின் பெரியவர்களும் சேர்ந்துதான் இந்த திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்கள்.. திருமணம் முடிந்ததும், மறுவீடு அழைப்பிற்காக பெண்ணின் வீட்டிற்கு புதுமண தம்பதிகள் வந்திருந்தனர்.. பெற்றோர் வீட்டில் குஷியாக இருந்தார் ரெஸ்பாகா.. தடபுடல் விருந்தும் நடந்தது..
இந்த விருந்திற்கு பிறகு, மறுபடியும் மாப்பிள்ளை வீட்டுக்கு செல்ல ஏற்பாடுகள் தயாரானது.. பெண்ணை தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக, மாப்பிள்ளை வீட்டினரும், காரில் கிளம்பினார்கள்.. அப்போது, மகளை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்டு அழுது, மகளை வழியனுப்பி வைத்தனர் அவரது பெற்றோர்.. அழுதுகொண்டே காரில் ஏறி கணவனின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார் ரெஸ்பாகா.
ஸ்ரீரங்கம் பகுதியில் பைபாஸ் ரோட்டில் கார் சென்று கொண்டிருந்போது, ரெஸ்பாகா திடீரென்று மயங்கி, பக்கத்தில் இருந்த மாப்பிள்ளை மீது சாய்ந்துவிட்டார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் உடனடியாக, திருவானைக்காவல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ரெஸ்பாகாவை அழைத்து சென்றனர்.
அங்கு ரெஸ்பாகாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக சொன்னார்கள்..
இதைக்கேட்டு, அதிர்ந்து போய் நின்றார் புதுமாப்பிள்ளை.. என்ன செய்வதென்றே தெரியாமல், மாப்பிள்ளை வீட்டில் குழம்பியும் தவித்தும் போனார்கள்.. பிறகு, மணப்பெண் வீட்டிற்கு தகவல் தரவும், அவர்கள் கதறிக்கொண்டே ஓடிவந்தார்கள்.. மகளை பார்த்து துடிதுடித்து அழுதனர்.. அதற்குள் கொள்ளிடம் போலீசார் அங்கு வந்துவிட்டனர்..
ரெஸ்பாகாவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணையும் தொடங்கினர்.. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இது தற்கொலையாக இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. அதாவது, மறுவீடு அழைப்பு விருந்திற்கு முன்னதாகவே ரெஸ்பாகா விஷம் குடித்திருக்கலாம் என்கிறார்கள்..
ஒருவேளை ரெஸ்பாகாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லையா? கட்டாய கல்யாணமா? அல்லது காதல் தோல்வி ஏதாவது இருக்கிறதா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. கல்யாணம் நடந்து 3-வது நாளிலேயே மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட விஷயம், திருச்சியில் அதிர்ச்சியை தந்து வருகிறது.
அத்துடன், புதுமணப்பெண் என்பதால், இந்த தற்கொலை குறித்து ஆர்டிஓ விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.. கல்யாண பெண்ணின் தற்கொலை சம்பவ அதிர்ச்சியில் இருந்து 2 குடும்பத்தினரும் இன்னமும் மீளவில்லை...