சமயபுரம் அருகே கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்த வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து அவரது உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது29). டெய்லரான இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதி பாஸ்கரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றதாகவும், அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.
உடல் புதைப்பு இதைத்தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் புறத்தாக்குடி அண்ணாநகர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் புதைத்து விட்டனர்.
இந்நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக டெல்லியில் உள்ள மனித உரிமை ஆணையத்திடம் அப்பகுதியை சேர்ந்த சிலர் புகார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மனித உரிமை ஆணையம் பாஸ்கரனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மண்ணச்சநல்லூர் தாசில்தார் சக்திவேல்முருகன், லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் வருவாய் துறையினர், அரசு டாக்டர்கள் முன்னிலையில் பாஸ்கரனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
பின்னர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவர் இயற்கை மரணம் அடைந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தெரியவரும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.