சமயபுரம் அருகே இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. அன்று ஆதிமாரியம்மன் கேடயத்தில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிம்ம வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், அன்ன வாகனம் என ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் எழுந்தருளினார்.
நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் ஆதிமாரியம்மன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஆதி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காலை 10 மணிக்கு தேரில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து வாண வேடிக்கைகள் முழங்க, தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதி வழியாக வலம் வந்த தேர் பகல் 1 மணிக்கு நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.