ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அ.தி. மு.க. அலுவலகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. அலுவலகத்தில் ஏற்கனவே நடைபெற்ற மோதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நீங்கள் (ஓ.பி.எஸ். தரப்பினர்) மீண்டும் அங்கு செல்வதால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே தற்போதைய சூழலில் நீங்கள் அங்கு செல்வதற்கு அனுமதி அளிக்க முடியாது. அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையின் போது சீலை உடனடியாக அகற்றி அலுவலக சாவியை எடப்பாடி பழனி சாமி தரப்பினரிடம் ஒப்படைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதன்படி அ.தி.மு.க. தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வசமே இருந்து வருகிறது.
இதன் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்துக்கு சென்றிருக்கிறார். இதன் மூலம் அ.தி.மு.க. தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதையே கோர்ட்டு உறுதி செய்துள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் 2 நீதிபதிகள் கடைசியாக அளித்த தீர்ப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே வந்துள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் கூறி உள்ளனர்.
இப்படி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தற்போதைய சூழல்கள் உள்ளன. இதனால் அவர் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் செல்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தற்போதைய சூழலில் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் நீங்கள் செல்வதாக இருந்தால் உரிய சட்ட அனுமதியை வாங்கி வந்த பிறகு செல்வதே சரியாக இருக்கும் என்று ஓ.பி.எஸ். தரப்பினரிடம் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் செல்வதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று கோர்ட்டிலோ, அல்லது வருவாய் அதிகாரியிடமோ அனுமதி வாங்கி வந்தால் மட்டுமே பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக எந்த முடிவையும் நாங்கள் எடுக்க முடியும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.