லடாக்கில் இறந்த ராணுவ வீரர் உடல் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தது - சவுந்திரபாண்டியன் எம்.எல்.ஏ. அஞ்சலி


திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள நெய் குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ரெமி ஜூலியன் (வயது 43). ராணுவ வீரரான இவருக்கு திருமணம் ஆகி ஜான்சி ராணி என்ற மனைவியும், ஜெனி ஜோயல் (9) என்ற மகனும் உள்ளனர். கடந்த 1999 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த ரெமி ஜூலியன் தற்போது என்ஜினீயரிங் ரெஜிமென்ட் யூனிட்டில் ஹவில்தாரராக பணியில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் காஷ்மீர் மாநிலம் லே லடாக்கில் வழக்கம்போல் பணியில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரெமி ஜூலியன் சிகிச்சை பலனின்றி கடந்த 29-ந்தேதி உயிரிழந்தார்.

இது குறித்து ரெமி ஜூலியன் குடும்பத்தாருக்கு ராணுவத்தினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மாலை அவரது உடல் லடாக்கில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் வழியாக திருச்சி வந்த இண்டிகோ விமானத்தில் கொண்டுவரப்பட்டது. அங்கு ராணுவ பட்டாலியனை சேர்ந்த ராணுவ வீரர்கள் அதிகாரி அழகர்சாமி மற்றும் மயில்வாகனன் தலைமையில் திருச்சி உடலுக்கு ராணுவ மரியாதை அளித்தனர். பின்னர் அவரது உடல் மாலை 5.30 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான நெய் குப்பை கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு ரெமி ஜூலியன் உடலுக்கு லால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து இன்று காலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.


Post a Comment

Previous Post Next Post