சிறுகனூர் அருகே உள்ள தெற்கு எதுமலையை சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மனைவி செல்லபாப்பா(வயது 60). இவர்களது மகன் ஜெகதீசன்(40). வெள்ளையன் ஏற்கனவே இறந்துவிட்டார். சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் ஜெகதீசன் வேலை பார்த்து வருகிறார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக சென்னையை சேர்ந்த கோமதி(36) என்ற பெண்ணை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இந்த காதல் திருமணத்தை எதுமலை கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக செல்லபாப்பாவின் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து இருந்தனர். மேலும் ஊரில் நடக்கும் எந்தவித விழாக்களிலும் அவரது குடும்பத்தினர் பங்கேற்க தடை விதித்த முக்கியஸ்தர்கள், வரி வாங்கவும் மறுத்துவிட்டனர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான செல்லபாப்பா இதுகுறித்து பலமுறை முறையிட்டும், நியாயம் கிடைக்கவில்லை என்பதால் இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த ஐகோர்ட்டு, செல்லபாப்பாவுக்கு சாதகமாக உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் திருவிழாவில் தன்னை கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், மேலும் தன்னிடம் வரி வாங்க வேண்டும் என்றும் மீண்டும் செல்லபாப்பா முறையிட்டுள்ளார். இதற்கு முக்கியஸ்தர்கள் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. இதைத்தொடர்ந்து செல்லபாப்பா, சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் எதுமலை கிராமத்தைச் சேர்ந்த நாட்டாமை குண்டு பெரியசாமி, ஆர்.சின்னசாமி, மாயவன் என்ற சிவலிங்கம், எஸ்.சின்னசாமி, சவுந்தர்ராஜ், சண்முகம், மோகன்தாஸ், வெள்ளைச்சாமி, ஊசானி கோவிந்தராஜ் ஆகிய 9 பேர் மீதும் குடியியல் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Tags:
நம்ம ஊரு செய்திகள்