திருச்சி உறையூர் நாச்சியார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரகுபதிராஜன் (வயது 42). இவர் தனியார் வங்கியின் கிரெடிட் கார்டை கடந்த 3 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு ஒரு செல்போன் எண்ணில் இருந்து 3 கால்கள் வந்துள்ளன. அந்த அழைப்பை ஏற்று இவர் பேசிய போது, மறுமுனையில் எந்த பதிலும் இல்லை. அதேநேரம் அவருடைய செல்போன் எண்ணுக்கு வங்கியில் இருந்து எஸ்.எம்.எஸ். வந்துள்ளன. அதில், ரூ.30 ஆயிரம், ரூ.45 ஆயிரம், ரூ.91 ஆயிரத்து 80 மற்றும் ரூ.25 ஆயிரம் என்று மொத்தம் ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்து 80 என வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது. ஆனால் இவருடைய செல்போன் எண்ணுக்கு வந்த ஓ.டி.பி. எண்களை யாரிடமும் கூறவில்லை. இவர் அந்த மர்ம எண்ணில் இருந்து வந்த அழைப்பை மட்டுமே எடுத்து பேசியுள்ளார். அதன்மூலமே அவர்கள் ஓ.டி.பி. எண்ணை அறிந்து பணத்தை எடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.