திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு வானத்தையே கூரையாக கொண்டு எழுந்தருளி உள்ள வெக்காளியம்மன் மக்களை காத்தருளி வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் வருட பிறப்பான சித்திரை முதல் நாள் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது. இதையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதற்காக தேர் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 9 மணி அளவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.
தேரோட்டத்தையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. அதிகாலை முதலே பக்தர்கள் பலர் பால் குடம் எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி பய, பக்தியுடன் அம்மனை தரிசித்தனர்.தேர்த்திருவிழாவையொட்டி பல்வேறு அமைப்பினர் சார்பிலும், பக்தர்கள் சார்பிலும் அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் ஏராளமான போலீசார், ஊர்க்காவல் படையினர், போக்குவரத்து காப்பாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்களின் வசதிக்காக மத்திய பஸ் நிலையம் மற்றும் சத்திரம் பஸ் நிலையங்களில் இருந்து உறையூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த சித்திரை திருவிழா நாளையுடன் (சனிக்கிழமை) முடிவடைகிறது. நாளை இரவு 8 மணிக்கு காப்பு களைதல், விடையாற்றி விழா நடைபெற உள்ளது.