திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளப்பாளையம் கிராமத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் உள்ள செட்டியார் குளத்தில் இருந்து செங்குளத்திற்கு செல்லும் நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து 20 வீடுகள் மற்றும் கோவில்கள் கட்டப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதன் அடிப்படையில் செங்குளம் நீர் வழித்தடம் குளக்கரையில் உள்ள 22 வீடுகளை அகற்ற அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கருவண்ணராயர் வீர சுந்தரி கோவில், கருப்பராயன் கோவில், வீரமாச்சி கோவில் ஆகிய 3 கோவில்களை அகற்றவும் முடிவு செய்தனர்.
நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுகள் மற்றும் கோவில்களை அகற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். 20 வீடுகள் அகற்றப்பட்ட நிலையில், கோவில்களை அகற்ற முயன்ற போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகளை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
இந்தநிலையில் இன்று மீண்டும் கோவிலை இடிக்க அதிகாரிகள் வந்தனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க அங்கு உடுமலை டி.எஸ்.பி., தேன்மொழிவேல் தலை மையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் கோவில்களை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றதுடன், தேங்காய் மட்டைகளை கொண்டு தடுப்பு ஏற்படுத்தினர்.
பொதுமக்கள் கூறுகையில்,குளத்தின் கரையில் நீர்நிலைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் கரையில் கோவில் அமைத்து 500 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபட்டு வருகிறோம் . வீடுகளை அகற்றுவதாக கூறிய அதிகாரிகள் எந்த முன்னறிவிப்புமின்றி கோவில்களை அகற்ற முயற்சிக்கின்றனர். பாரம்பரியத்தை அழிக்கும் வகையில் செயல்படுகின்றனர் என்றனர்.
Tags:
மாவட்டம்