லால்குடி அருகே பச்சிளம் குழந்தையை கொன்று தாய் தற்கொலை


திருச்சி மாவட்டம் லால்குடி காட்டூர் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 32). இவர் அந்த  பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும், இவரது உறவினர் மகள் சரண்யா (30) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளது. இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே சரண்யாவிற்கு   உடல் நலத்தில் பிரச்சினைகள் இருந்துள்ளது. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று  தினேஷ்குமார் ஒரு திருமண வீட்டிற்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். மூத்த மகள் பள்ளிக்கு சென்று விட்டார்.  வீட்டில் இளைய மகளும், சரண்யாவும் மட்டும் இருந்துள்ளனர்.

தினேஷ்குமார் திருமணத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டி இருப்பதை பார்த்து கதவை      தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் திறக்காததால் அதிர்ச்சி அடைந்த அவர்   மேலே வீட்டின் கூரைக்கு  சென்று ஓட்டை பிரித்து உள்ளே சென்றார்.

அப்போது தன் மனைவி சரண்யா மின் விசிறியில் தூக்கு போட்டு பிணமாக தொங்கினார். ஒன்றரை வயது ஆண் குழந்தையும் அருகே உள்ள கட்டிலில் பிணமாக கிடந்ததை பார்த்து கதறி துடித்தார்.
பின்னர் இதுகுறித்து லால்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

லால்குடி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இளம்பெண் மரணத்திற்கு காரணம் என்ன? குழந்தை எவ்வாறு இறந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

Previous Post Next Post