திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியின் விரிவாக்கப் புல பணிகள் துறையின் சார்பில், கல்லூரியின் மாதிரி கிராமமான குமார வயலூர் கிராமத்திற்கு தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், வாழை நார் பிரித்தெடுக்கும் எந்திரம் வழங்கப்பட்டது.
இந்த அதிநவீன எந்திரத்தை கல்லூரியின் ஆட்சி மன்றக் குழுவின்தலைவரும், திருச்சி தஞ்சை திருமண்டலத்தின் பேராயருமான சந்திரசேகரன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டி.பால்தாயாபரன், துணைமுதல்வர்கள், நிதியாளர், புல முதன்மையர்கள், பேராசிரியர்கள், கல்லூரி பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரியின் விரிவாக்கப் புலப்பணிகள் துறையின் சார்பாக தத்தெடுக்கப்பட்ட கிராமங்களிலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழை சாகுபடி அதிகம் காணப்படுகிறது. இதனைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கிராமப்புற பெண் களின் மேம்பாட்டிற்காக குமார வயலூரில் உருவாக்கும் நிலையம் செயல்படும்.
இதன் மூலம் இக்கிராமத்தில் உள்ள சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வாழை நார் தயாரித்தல் பயிற்சி அளித்து தொழில் முனைவோராக உருவாக்கபடுவர். வாழைத்தண்டில் நார் பிரித்தெடுப்பதன் மூலம் அதன் கூழ் உரமாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும்.
மேலும் இந்த நிகழ்வில் வாழை நாரால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அதை விழாவில் கலந்து கொண்டவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்து பெரிதும் வியந்தனர்