உக்ரைனில் 3 குழந்தைகள் உள்பட 198 பேர் உயிரிழப்பு

 


நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் லட்சக்கணக்கிலான படை வீரர்கள் மற்றும் போர் தளவாடங்களை குவித்தது.  போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வேண்டுகோள் வைத்தது.

இது ஒருபுறம் இருக்க, தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.  இதனை தொடர்ந்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்க தொடங்கின.  கடந்த 24ந்தேதி 200க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தி உள்ளது என்று உக்ரைன் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

ரஷியாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.  நேற்று முன்தினம் 2வது நாளாகவும் போர் நீடித்தது.

இதில், ரஷிய தரப்பில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டு விட்டன.  ரஷிய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், 3வது நாளான நேற்று உக்ரைனின் 211 ராணுவ நிலைகளை இலக்காக கொண்டு அழித்துள்ளோம் என்று ரஷியா தெரிவித்து உள்ளது.  எனினும், உக்ரைன் ராணுவ தாக்குதலில், ரஷிய படையை சேர்ந்த 1,000 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று உக்ரைன் ராணுவம் அறிவித்து உள்ளது.

ரஷிய படையெடுப்பினால், 10 ராணுவ அதிகாரிகள் உள்பட 137 வீரர்களை இழந்துள்ளோம் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.  ஆனால், ரஷிய வீரர்கள் உயிரிழப்புபற்றி ரஷிய ராணுவம் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், உக்ரைன் சுகாதார மந்திரி விக்டர் லையாஷ்கோ பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், 3 நாளாக தொடர்ந்து நடந்து வரும் போரில் 1,115 உக்ரைனியர்கள் காயமடைந்து உள்ளனர்.  அவர்களில் மொத்தம் 33 பேர் குழந்தைகள்.  ரஷியா தொடுத்துள்ள போரில் 3 குழந்தைகள் உள்பட 198 பேரை இதுவரை இழந்துள்ளோம் என தெரிவித்து உள்ளார்.

Post a Comment

Previous Post Next Post