திருச்சியில் என்.சி.சி. அகடாமி அமைக்க நிலம் ஒதுக்கீடு


 திருச்சி என்.சி.சி. குரூப் கமாண்டரின் கீழ் 9 பட்டாலியன்கள் செயல்பட்டு வருகின்றன.  அவற்றில் 80 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் 150 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 20 ஆயிரம் பேருக்கு என்.சி.சி. பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாக என்.சி.சி. அலுவலகங்கள் வாடகை கட்டிடங்களில்தான் இயங்கி வந்துள்ளன. அவற்றுக்கான வாடகையை தமிழக அரசு செலுத்தி வருகிறது.

திருச்சி வட்டார தலைமை அலுவலகம் மற்றும் மூன்று பட்டாலியன்கள் திருச்சி பாரதிதாசன் சாலையில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.    

என்.சி.சி.க்கு என்று தனியாக அலுவலகம் மற்றும் பயிற்சிக்கூடங்கள், முகாம் கட்டிடங்கள் இல்லாததால்  கவாத்து  பயிற்சி, துப்பாக்கி  சுடும்  பயிற்சி போன்ற ராணுவ பயிற்சிகள் அளிப்பதில் பல்வேறு சிரமங்கள் இருந்து வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையில் திருச்சியில் என்.சி.சி. அகாடமி  மற்றும் அலுவலகம் அமைக்க தமிழக அரசு நிலம் ஒதுக்கி தந்துள்ளது.

இதுகுறித்து திருச்சி சரக என்.சி.சி. தலைமை அதிகாரி கர்னல் இளவரசன் கூறுகையில்,    என்.சி.சி. அகாடமி அமைக்க இடம் கேட்டு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து, கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக முயற்சி செய்யப்பட்டு வந்தது.

இப்போது 4.87 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கி தந்துள்ளது. ஓலையூர் கிராமத்தில் புறவழிச்சாலை அருகே உள்ள இந்த இடத்தை என்.சி.சி.க்கு அரசு ஒப்படைப்பு செய்துள்ளது.

இந்த இடத்தில் குறைந்தது 600  என்.சி.சி. மாணவ, மாணவிகள் தங்கி  பயிற்சி பெறும் வசதிகளுடன் கூடிய கேம்ப் பயிற்சி வளாகங்கள் அப்ஸ்டகிள் கோர்ஸ் எனும் தடை தாண்டி ஓடும் பயிற்சி தளம், துப்பாக்கி சுடும் பயிற்சி மையம், சிலிதரிங் பிளாட்பாரம், பயரிங் மற்றும் ஏர் சிமுலேட்டர் மையங்கள், அலுவலர்கள் தங்குமிடம் ஆகியவை அமைய உள்ளன.

இதற்கான வரைவு அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது இந்திய அளிவில் ஒருசிறந்த முன்மாதிரி என்.சி.சி. பயிற்சி அகாடமியாக அமையும் என்றார்.

அப்போது துணை இயக்குனர் புருஷோத்தமன், கர்னல் காளியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post