போலீஸ் நிலையம் அருகே சம்பவம்: தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை

 



நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் பொன்னுதாஸ் என்ற அபே மணி (வயது 33). இவர் 35-வது வார்டு தி.மு.க. வட்ட செயலாளராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அபே மணி பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள தனது வீட்டின் முன்பு நின்று சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் அபே மணியை வெட்டிக் கொலை செய்து விட்டு, காரில் தப்பிச் சென்றுவிட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, அபே மணி சமீபத்தில் டாஸ்மாக் பார் ஏலம் எடுத்து இருந்தார். மேலும் அவரது தாயார் 35-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்.

இதுதொடர்பான முன்விரோதத்தில் அபே மணி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதற்கிடையே கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் கொலையாளிகள் பயன்படுத்திய கார் தென்காசி ரோட்டில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொலையாளிகள் தென்காசி வழியாக கேரளாவுக்கு தப்பிச்சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் ஒரு தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்து உள்ளனர்.

இதற்கிடையே டாஸ்மாக் பார் ஏலம் தொடர்புடையவர்கள் மற்றும் அந்த வார்டில் போட்டியிட முயற்சி செய்தவர்களையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலை தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post