திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் இன்னும் ஓரிரு தினங்களில் வேட்பாளர்களின் பிரசாரத்தால் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 4 பறக்கும் படைகள் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை பின்பற்றவும் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா அதிகம் நடைபெறுவதாக புகார்கள் வருவது வாடிக்கையாகும். அதை தடுக்கும் விதமாக வெளியூர்களில் இருந்து வேட்பாளர்களுக்கு பணம் பட்டுவாடா நடக்கக்கூடாது என்பதற்காக திருச்சி மாநகர போலீசார் தரப்பில் கமிஷனர் உத்தரவின் பேரில் மாநகரில் சுமார் 14 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சோதனை சாவடிகளை கடந்து செல்லும் கார்கள், இருசக்கர வாகனங்கள் சந்தேகத்திற்குரிய நபர்கள் அனைவரிடமும் போலீசார் சோதனை நடத்திய பின்னரே திருச்சி மாநகருக்குள் அனுமதிக்கிறார்கள்.
மேலும் அவர்களிடம் சரியான அனுமதியின்றி அதிக பணம் இருந்தால் போலீசார் அதனை கைப்பற்றி முறையாக அனுமதிக்கப்பட்ட பணமா என்று ஆராய தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விடுவார்கள்.
இந்தநிலையில் திருச்சி கருமண்டபம் பகுதியில் கண்டோன்மென்ட் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையிலான போலீசார் கருமண்டபம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டு கார்களின் உதிரிபாகங்கள் வைக்கும் பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினார்கள். பின்னர் அந்த வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
இது உதவி ஆணையர் அஜய்தங்கம் கூறுகையில், தேர்தல் சமயம் என்பதால் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். சரியான ஆவணம் இல்லாமல் பணத்தை யாராவது காரில் அல்லது இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்வது தவறு.
அதை தடுக்கவே மாநகர் முழுவதும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.