முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

வெலிங்டன்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் முப்படை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நீலகிரி மாவட்டம் வெலிங்டன்னில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து எம்.ஐ 17 வி 5 ரக ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது. விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடன் பயணித்த அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து நடந்த இடத்தில் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு ராணுவ வீரர் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கொண்டுவரப்பட்டு அணிவகுப்புடன், பேரக்ஸ் நாகேஷ் நினைவு சதுக்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவர்களது உடலுக்கு முப்படை அதிகாரிகள், தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மக்கள் வரிசையாக சென்று மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் கோவை சூலூருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து டில்லிக்கு விமானம் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. விபத்தில் இறந்த மற்ற ராணுவ வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிகிறது.


Post a Comment

Previous Post Next Post