புதுடில்லி: இந்தியாவில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி நாளை (டிச.,23) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ், நம் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் 15 மாநிலங்களில் பரவி, தற்போது வரை 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக டில்லியில் 57 பேர், மஹாராஷ்டிராவில் 54 பேர், தெலுங்கானாவில் 24 பேர், கர்நாடகாவில் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 90 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் அதிகரித்துவரும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஒமைக்ரான் பரவல் தொடர்பாக பிரதமர் மோடி நாளை (டிச.,23) ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், சுகாதாரத்துறை அதிகாரிகள், மத்திய அரசு உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பர் எனக் கூறப்படுகிறது.