சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அக்ரஹார நாட்டாமங்கலம் வள்ளுவர் பூங்கா பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). பிறவியிலே கேட்கும் மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளி. இவர் கட்டிட வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு 10 மணிக்கு இவர் வீட்டிலிருந்து வெளியில் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் மணிகண்டன் குள்ளம்பட்டி பகுதியில் பிரிவு சாலை அருகே கரடு பகுதியில் தலையில் கல்லை போட்டு கொலைசெய்யப்பட்டு கிடந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து காரிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரிப்பட்டி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மாற்றுத்திறனாளி மணிகண்டன் தலையில் கல்லை போட்டும், மது பாட்டிலால் வயிற்றில் குத்தியும் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை குறித்து துப்பு துலக்க தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடியது.
இதுபற்றி விசாரணை நடத்த வாழப்பாடி டி.எஸ்.பி முத்துசாமி காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த கொடூர கொலை சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.