ஆவின் பாலகத்தில் பணிபுரிந்த முன்னாள் அமைச்சர் வளர்மதி மகன் பணியிடை நீக்கம்

 


திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் ஆவின் பால்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பால் பண்ணையில் இருந்து திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த பால் பண்ணையில் என்ஜினீயரிங் பிரிவில் மேலாளராக ஹரிராம் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் 2-வது மகன் ஆவார். இந்தநிலையில் ஆவின் பால்பண்ணையில் 5 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்த பயன்படுத்தும் ரூ.1½ கோடி மதிப்புள்ள பாய்லர் கடந்த வாரம் திடீரென பழுதானது.

இந்த பாய்லரை பழுது நீக்கும் பொறுப்பு  ஹரிராமிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவர் 2 நாட்கள் விடுமுறை எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பணியின்போது, அலட்சியமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.


இதையடுத்து பணியை செய்ய தவறியதாக அவரை பணியிடை நீக்கம் செய்து, ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். திருச்சியில் ஆவின் பால்பண்ணையில் பணியாற்றி வந்த முன்னாள் அமைச்சரின் மகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

Previous Post Next Post