உறையூர் அருகே பரிகார பூஜை என்று சொல்லி பெண்ணிடம் நகைகளை ஏமாற்றிய போலி குடுகுடுப்புகாரர் ; இளம்பெண் தற்கொலை

 


15 வருடங்களுக்கு முன்பு குடுகுடுப்பைகாரர்கள் என்று சொல்லிக்கொண்டு வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை மட்டும் கிராமப்புறங்களில் வந்து நடுராத்திரியில்  வாக்கு சொல்வது வழக்கமாக இருந்தது. 

தற்போதோ...

மாதம் ஒருமுறை ஒவ்வொருவராக வந்துகொண்டு செல்கின்றனர். அதுமட்டுமின்றி பகல் நேரத்தில் வாக்கு சொல்வதாக சொல்லி ஒரு 10 நிமிடம் அவர்களிடம் பேசுவதை கேட்டால் போதும்,

உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நேரம் சரியில்லை, உங்களுக்கு ஆகாதவர்கள் உங்களுக்கு வேலைபாடு செய்திருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லி, இதன் காரணமாகத்தான் நீங்கள் இப்படி வளராமலே இருக்கிறீர்கள் என்று கூறி, கடைசியில் ஒரு பரிகாரம் செய்தால் சரியாகிடும். அதற்கு நீங்கள் பணம், பொருள், நகை கொடுங்கள் பூஜை முடிந்ததும் நான் திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லி. நாமும் நம்மோட நல்லதுக்குத்தான் சொல்றாங்க என்று நினைத்து கொடுப்போம். கொடுத்த சற்று நேரத்தில் நமது மனநிலையை மாற்றி பிறகு அவர்கள் சொல்வதை மட்டுமே நாம் கேட்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். கடைசியில் பொருளையோ, பணத்தையோ, நகைகளையோ நாம் பரிகொடுக்க நேரிடும்.

அந்தவகையில் கிராமங்களில் நடந்தது போது, தற்போது நகரங்களிலும் இதுபோன்று நடந்து ஒரு பெண்ணின் உயிரையும் பறித்துள்ளது

திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவருக்கும் திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியை சேர்ந்த சுகந்தி (வயது 26) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு குழந்தை உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சுகந்தி தனது கைக்குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றார். இதையடுத்து மனைவி, குழந்தையை பார்ப்பதற்காக ஜெகன் திருவானைக்காவல் சென்றார். பகல் 11.30 மணி அளவில் ஜெகன் தனது மனைவியுடன் வீட்டில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் தன்னை ஜோதிடர் என அறிமுகம் செய்தார். பின்னர் அவர் சுகந்திக்கும், அவரது குழந்தைக்கும் பெரிய ஆபத்து சூழ்ந்துள்ளது. இதற்கு உடனே பரிகார பூஜை செய்தாக வேண்டும் என கூறினார். இதைகேட்டு பயந்து போன ஜெகனும் சம்மதித்தார்.

பின்னர் சுகந்தி அணிந்துள்ள நகைகளை கழற்றி தருமாறும், பூஜை செய்துவிட்டு திருப்பி தந்துவிடுவதாகவும் ஜோதிடர் கூறியுள்ளார். இதையடுத்து ஜெகன் மனைவி அணிந்திருந்த தாலி, கம்மல், மோதிரம் உள்ளிட்ட ஒன்றரை பவுன் நகைகளையும் கழற்றி அவரது கையில் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட அவன், ஒரு செம்பு தண்ணீரில் புளியை கரைத்து எடுத்து வரச்சொல்லி இருக்கிறான். பின்னர் செம்புக்குள் நகையை போட்டு மஞ்சள் துணியால் கட்டி மந்திரங்களை கூறியுள்ளான்.

இதையடுத்து கணவன்-மனைவி இருவரையும் முச்சந்தியில் சென்று 3 சூடம் ஏற்றி வருமாறு கூறினான். உடனே இருவரும் முச்சந்திக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர் சூடம் ஏற்றிக்கொண்டு வீடு திரும்பினர். வீட்டில் ஜோதிடரை காணாமல் திடுக்கிட்டனர்.

ஏற்கனவே செம்புக்குள் போட்ட நகையை மறுநாள் தான் துணியை பிரித்து பார்க்க வேண்டும் என கூறியுள்ளான். இருந்தபோதிலும் சந்தேகம் அடைந்த ஜெகன் துணியை அகற்றி பார்த்தபோது நகையை காணவில்லை. உடனே அக்கம்பக்கத்தில் சென்று தேடிப் பார்த்துள்ளார். ஆனால் எந்த தகவலும் இல்லை. மர்ம ஆசாமி ஏழை பெண்ணின் நகைகளுடன் மாயமாகி விட்டான்.

இதுபற்றி சுகந்தி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் இந்திரா காந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் ஜோதிடரின் உருவம் பதி வாகி இருந்தது. அதன் அடிப்படையில் அந்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே கஷ்டப்பட்டு சிறுக சிறுக சேமித்த நகையை தனது அறியாமையால் பறிகொடுத்து விட்டோமே என்ற விரக்தியில் சுகந்தி இருந்து வந்தார். சரியாக பேசாமல், சாப்பிடாமல் சோகத்துடன் இருந்த அவர் நேற்று யாரும் எதிர்பாராத வகையில், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post