சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீட்டு செலுத்துங்கள் ; விவசாயிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்

 


வேளாண்மையில் தொடர் வளர்ச்சியானது ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான அரசால் வேளாண்மைத் துறைக்கு என்று 2021-22-ம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி வேளாண்மை துறை என்ற பெயரினை வேளாண்மை உழவர் நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து நிலையான வேளாண் வளர்ச்சிக்கு வழிவகுத்து வருகிறது.

2020-2021-ம் ஆண்டில், பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குறுவை, சம்பா மற்றும் குளிர்கால பருவப் பயிர்கள் 42.75 லட்சம் ஏக்கர் பரப்பளவு பயிர் காப்பீடு செய்வதற்காக, 25.76 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர். குறுவை (காரீப்) பருவத்திற்கான இழப்பீட்டு தொகையாக ரூ.133.07 கோடி, 2 லட்சத்து 2 ஆயிரத்து 335 விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

ரூ.1,597.18 கோடி

முதல்-அமைச்சர் தலைமையிலான அரசால், நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 2021-22-ம் ஆண்டில் பயிர்காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ரூ.2 ஆயிரத்து 327 கோடி நிதியை 2021-22-ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், 2020-2021-ம் ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கான தமிழ்நாடு அரசின் பயிர் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1,553.15 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

இதன் காரணமாக, 2020-202-ம் ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கு (சம்பா நெற்பயிர் உள்பட) இழப்பீட்டு தொகையான ரூ.1,597.18 கோடியில், ‘இப்கோ-டோக்யோ’ பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் ரூ.1,089.53 கோடியும், இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் ரூ.507.65 கோடியும், சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு தற்போது ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வேண்டுகோள்

விவசாயிகளுக்கான இந்த இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்ட 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கிடும் விதமாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையினை வழங்கி தொடங்கி வைத்தார்.

மேலும் 2021-2022-ம் ஆண்டு சம்பா பருவ பயிர்களைக் காப்பீடு செய்ய 26.8.2021 அன்று தமிழ்நாடு அரசால் 16.8.2021 அன்றைய நாளிட்ட வேளாண்மை, உழவர் நலத்துறை அரசாணை (டி) எண்.141 ல் ஆணை வெளியிடப்பட்டு, விவசாயிகள் சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீட்டு கட்டணத்தை (பிரீமியத்தை) செப்டம்பர் 15-ந் தேதி முதல் செலுத்தி வருகின்றனர்.

13.10.2021 வரை 61 ஆயிரத்து 871 விவசாயிகளால் பயிர்க் காப்பீடு செய்ய பதிவு செய்யப்பட்டு, 67 ஆயிரத்து 556 ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து தங்கள் பயிரை காப்பீடு செய்து கொள்ளுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண் பெருமக்களை கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, வேளாண்மை-உழவர் நலத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆர்.பிருந்தாதேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post