திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள இளங்கோவனுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
இளங்கோவனின் சொந்த ஊரான ஆத்தூர் புத்திரகவுண்டம்பாளையத்தில் உள்ள வீட்டில் இன்று காலை 6 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை தொடங்கினர்.
அந்த பகுதியில் உள்ள இளங்கோவனின் சகோதரி ராஜகுமாரி வீடு, இளங்கோவனின் மாமனார் வீடு, உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் தனித்தனி குழுவாக பிரிந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
வீட்டில் அனைத்து அறைகளிலும் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் தண்ணீர் தொட்டிகளிலும், மொட்டை மாடியிலும் சோதனை நடத்தினர். இப்படி வீடு முழுவதும் சல்லடை போட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது வீடுகளில் இருந்தவர்களிடம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டில் இருந்து யாரையும் வெளியில் அனுமதிக்கவில்லை. வெளி நபர்கள் யாரும் வீட்டுக்குள் வருவதற்கு அனுமதி தரவில்லை.
இந்த சோதனையின் போது இளங்கோவன் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்தது தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அ.தி.மு.க.வினர் இளங்கோவன் வீடு மற்றும் சோதனை நடைபெறும் இடங்களில் திரண்டனர். இதனால் சோதனை நடைபெற்ற இடங்களில் பரபரப்பு நிலவியது.
சேலத்தில் 18 இடங்களிலும், நாமக்கல்லில் 2 இடங்களிலும், சென்னையில் 2 இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. கரூரில் இளங்கோவனுக்கு நெருக்கமான ஒருவர் வீட்டில் சோதனை நடத்தி வரும் போலீசார், திருச்சியில் 4 இடங்களில் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.
இந்த 5 மாவட்டங்களில் சோதனை நடந்து வரும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
பணமதிப்பு இழப்பின் போது சேலம் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.600 கோடி பணம் பரிமாற்றம் செய்ததாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.