வங்கி கணக்கு வாயிலாக, மாதாந்திர பில்கள் மற்றும் தவணை தொகைகளை, 'ஆட்டோ டெபிட்' முறையில் செலுத்துவதில், நாளை (அக்.,1) முதல் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ரிசர்வ் வங்கியின் உத்தரவினை அடுத்து, இந்த மாறுதல்களை வங்கிகள் மேற்கொள்ள உள்ளன. இது குறித்து பெரும்பாலான வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளன. நம்மில் பலர், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலாக, செல்போன், ஓ.டி.டி., உள்ளிட்ட பல சேவைகளை பெற, அதற்கான கட்டணத்தை, ஆட்டோ டெபிட் வாயிலாக செலுத்தி வருகிறோம்.
சேவை அல்லது பொருளை அல்லது கடனை வழங்கும் நிறுவனங்கள், குறிப்பிட்ட தேதியில், நம் வங்கி கணக்கிலிருந்து தொகையை அதுவாகவே எடுத்துக் கொள்ளும். ஆனால், இனி வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்காமல், அப்படி பணம் எடுக்க முடியாது.பணம் எடுப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக, வாடிக்கையாளர்களுக்கு அது குறித்த தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.