சார்பாக தென்மேற்குப் பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடரின்போது இன்னல்களிலிருந்து தற்காத்துக் கொள்வது தொடர்பான ஒத்திகை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு முன்னிலையில் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. திருச்சி தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் கருணாகரன் தலைமையிலான வீரர்கள் இந்த பேரிடர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
அப்போது கலெக்டர் எஸ்.சிவராசு கூறுகையில், தென்மேற்கு பருவமழை வெள்ள எச்சரிக்கை வந்தவுடன் குடிநீர், ஈரப்பதம் இல்லா உணவு மற்றும் குழந்தைகளுக்கான உணவுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். வீட்டிலுள்ள விலை உயர்ந்த பொருட்களையும் மற்றும் ஆவணங்களையும் வீட்டின் உயரமான இடத்தில் வைக்க வேண்டும் அல்லது பாலித்தீன் பைகளில் அடைத்து நிலத்தடியில் ஆழமாக குழிதோண்டி பத்திரப்படுத்த வேண்டும். கால்நடைகளை மேட்டுப்பாங்கான பகுதிக்கு அழைத்துச் சென்று அப்புறப்படுத்தி அவைகளுக்கான தீவனம் மற்றும் குடிநீரை சேமித்து வைக்க வேண்டும். அவ்வப்போது ஏற்படுகின்ற சீற்றங்களை குறித்து வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
பயிர்கள் மற்றும் வீட்டு பொருட்களை காப்பீடு செய்ய வேண்டும். மின்சாதன இணைப்புகள் அனைத்தையும் துண்டித்து விட வேண்டும். குடிநீரை நச்சுத்தன்மை பரவாமல் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். பாம்புகளால் வரும் அபாயத்தை தவிர்க்க வேண்டும். உணவுப் பொருட்களை மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும். வீடு மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.