தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் கடந்த சில நாட்களுக்ளுக்கு முன்பு படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இதனால் பலர் படுக்கைகள் கிடைக்காமல் ஆஸ்பத்திரி வளாகத்திலே மணிக்கணக்கில் காத்துக்கொண்டிருந்தனர்.
இதையடுத்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது மட்டும் அல்லாமல், அனைத்து ஆஸ்பத்திரிகளிலும், படுக்கைகளும் அதிகளவில் காலியாக இருக்கின்றன.
அந்தவகையில் சில நாட்களுக்கு முன்பு வரை, கொரோனா வார்டுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கும், நோயாளிகளை கவனித்துக்கொள்ள, நோயாளிகளின் உறவினர்கள் ஒருவருக்கு பார்வையாளர் அனுமதி அட்டை வழங்கப்பட்டு, கொரோனா வார்டுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில், ஒரு அனுமதி அட்டையில், பலர் கொரோனா வார்டுக்குள் வருவதாலும், பின்னர் அவர்கள் வெளியே செல்வதால், இவர்கள் மூலம் சமூகத்தில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதாலும், பார்வையாளர்களுக்கு கொரோனா வார்டுக்குள் அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து நோயாளிகளின் உறவினர்கள், தங்களை கொரோனா வார்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என அவ்வபோது ஆஸ்பத்திரி வளாகங்களில் சலசலப்பில் ஈடுபட்டு வந்தனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கொரோனா வார்டுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் உடல் நிலை குறித்த தகவலை, ‘டிஜிட்டல்’ பலகைகள் மூலமாக வெளியே இருக்கும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்படும் என அறிவித்தார்.
அந்தவகையில் சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில், ‘டிஜிட்டல்’ பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் 24 மணி நேரமும், சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் உடல்நிலை குறித்த தகவல்கள் அறிவிக்கப்படுகின்றன. அந்த ‘டிஜிட்டல்’ பலகையில், நோயாளி சிகிச்சை பெறும் பிரிவு, வார்டு எண், நோயாளியின் பெயர், வயது, பாலினம், மருத்துவ நிலை குறிப்பிடப்பட்டிருக்கும்.
மருத்துவ நிலையில் சீரான நிலை, முதல் நிலை சிகிச்சை, தொடர் சிகிச்சை, மிக தீவிர சிகிச்சை என்று நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைக்கு ஏற்ப அதில் குறிப்பிடப்படும். இந்த வசதி மூலம் பொதுமக்கள், கொரோனா வார்டுக்குள் அனுமதிக்கபட்டிருக்கும் தங்களது உறவினர்களின் உடல்நிலையை அறிந்து கொள்ளலாம்.
இந்தநிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள ‘டிஜிட்டல்’ பலகையை நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
Tags:
தமிழகம்