எஜமான் பட பாணியில் வயிற்றில் துணியை கட்டி, கர்ப்பிணியாக நடித்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருச்சி ஆா்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
2-வது திருமணம்
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள இனியானூர் சுபதம் அவன்யூவை சேர்ந்தவர் பரிமளா (வயது 32). இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் உப்பிலியபுரத்தை சேர்ந்த பெருமாள் என்பவருடன் திருமணம் நடந்தது. இவா்களுக்கு குழந்தை இல்லாததால் இருவரும் பிரிந்துவிட்டனர்.
கடந்த 2 ஆண்டுக்கு முன்னர் திருச்சி கே.கே.நகா் எல்.ஐ.சி. காலனியை சோ்ந்த ராஜ்குமாரை பரிமளா 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பரிமளா கர்ப்பம் தரித்தார். 2 மாதத்தில் கர்ப்பம் கலைந்தது. இதை அவர் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார்.
வயிற்றில் துணியை கட்டி நாடகம்
மேலும் எஜமான் திரைப்பட பாணியில், வயிற்றில் துணியை கட்டிக்கொண்டு தான் கா்ப்பமாக இருப்பது போல் வீட்டில் உள்ளவர்களிடம் நடித்துள்ளார். பின்னர் 7-வது மாதம் வளைகாப்பு போட்டு தனது தாய் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
கர்ப்பமாகி 10 மாதம் முடிந்த நிலையில் பரிமளாவின் தாயார் குழந்தை பிறக்கும் தேதியை கேட்டுள்ளார். ஆனால் பரிமளா எதுவும் கூறவில்லை. சந்தேகம் அடைந்த அவரது தாயாரும், ராஜ்குமாரும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
அங்கு சென்ற பரிமளா தனது கணவரிடமும், தாயாரிடமும் தான் கர்ப்பம் இல்லை. கர்ப்பம் கலைந்து விட்டது. அதனால் வயிற்றில் துணியை கட்டிவைத்துள்ளதாக உண்மையை கூறியுள்ளார். இதனால் ராஜ்குமார் கோபித்துக்கொண்டு அவரிடம் எதுவும் பேசாமல் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் பரிமளாவை சமாதானம் செய்து அவருடைய தாயார் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பரிமளா நேற்று முன்தினம் காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆர்.டி.ஓ. விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் பரிமளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரிமளாவுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடமே ஆவதால் திருச்சி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றார்
Tags:
நம்ம ஊரு செய்திகள்