தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு அமலாகி உள்ளது. இதனால், ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து, 2.11 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 1 கிலோ கோதுமை மாவு, உப்பு, ரவை; தலா, அரை கிலோ சர்க்கரை, உளுத்தம் பருப்பு; தலா, 250 கிராம் புளி, கடலை பருப்பு; தலா, 100 கிராம் கடுகு, சீரகம், மஞ்சள் துாள், மிளகாய் துாய்; டீ துாள், ஒரு குளியல் சோப்பு, ஒரு துணி துவைக்கும் சோப்பு ஆகியவை அடங்கிய தொகுப்பை வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. அவை, நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக, தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார். அத்துடன், கொரோனா நிவாரணத்தின் இரண்டாம் தவணையாக, 2,000 ரூபாய் வழங்கும் திட்டமும், நாளை துவக்கி வைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, 5ம் தேதி முதல் ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக எந்த தேதி, நேரத்திற்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கன்கள், கார்டுதாரர்களின் வீடுகளில், நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன