ஆதரவற்ற குழந்தைகளை பராமரிப்பதற்கான வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு வெளியீடு

 


கொரோனாவால் பெற்றோரை இழந்து வாடும் ஆதரவற்ற குழந்தைகளை பராமரிப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

இந்தியாவை கடந்த ஆண்டு தாக்கிய கொரோனாவின் முதல் அலையும், தற்போதைய 2-வது அலையும் ஆயிரக்கணக்கான குழந்தைகளை ஆதரவற்ற நிலைக்கு தள்ளி இருக்கிறது. குறிப்பாக 9,436 குழந்தைகள் தங்கள் தாய் அல்லது தந்தை இருவரில் குறைந்தபட்சம் ஒருவரையாவது இழந்திருப்பதாகவும், இதில் 1,700-க்கும் அதிகமான குழந்தைகள் தாய்-தந்தை இருவரையும் இழந்திருப்பதாகவும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் கூறியிருந்தது.

இந்த குழந்தைகள் மட்டுமின்றி தொடர் பாதிப்புகளால் இதைப்போல ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும் குழந்தைகளையும் பராமரிக்க அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஏற்கனவே நலத்திட்டங்களை அறிவித்து உள்ளன.

இதன் தொடர்ச்சியாக மேற்படி குழந்தைகளை கண்டறிந்து, பராமரிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. குறிப்பாக இந்த குழந்தைகளின் மேம்பாட்டில் மாநிலங்கள், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ், பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு உள்ள பங்களிப்பை வரையறுத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சக செயலாளர் ராம்மோகன் மிஸ்ரா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவால் தாய், தந்தையரை இழந்து துன்பத்தில் வாடும் குழந்தைகளை மாநிலங்கள் கண்டறிய வேண்டும். இதற்காக உள்ளூர் மட்டத்தில் உதவி மையங்களையும் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு கண்டறியப்படும் ஒவ்வொரு குழந்தையின் சுயவிவரங்கள் குறித்தும் தனித்தனி தரவுதளத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்களின் குறிப்பிடத்தக்க தேவைகள் உள்ளிட்டவற்றையும் இணைத்து ‘டிராக் சைல்டு’ இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தொற்று பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக குழந்தைகள் பராமரிப்பு மையத்திலேயே தனிமைப்படுத்தும் வசதி மற்றும் குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்காக மனநல மருத்துவர், ஆற்றுப்படுத்துனர் ஆகியோரையும் ஏற்படுத்த வேண்டும்.

இந்த குழந்தைகள் விவகாரத்தில் மாவட்ட கலெக்டர்களின் பங்களிப்பை பொறுத்தவரை, இந்த குழந்தைகளின் காப்பாளர்களே கலெக்டர்கள்தான். சிறார் நீதிச் சட்டம் 2015-ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி குழந்தைகளின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை கலெக்டர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த குழந்தைகளை கண்டறிதல், கண்காணித்தல், அனைத்து பலன்களும் அடைவதை உறுதி செய்தல் போன்றவற்றுக்காக மாவட்ட அளவில் பல்துறை சிறப்புக்குழுவை உருவாக்க வேண்டும்.

மேற்படி குழந்தைகளின் குடும்ப சொத்துகள் அல்லது மூதாதையரின் சொத்துகளில் குழந்தைகளுக்கான உரிமையை நிலைநாட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்ட விரோதமாக தத்தெடுத்தல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், கடத்தல் போன்ற எத்தகைய பிரச்சினைகளிலும் இந்த குழந்தைகள் சிக்காமல் மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த குழந்தைகளை அடையாளம் கண்டு மாவட்ட நிர்வாகம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களிடம் ஒப்படைப்பதற்காக பஞ்சாயத்து அளவில் குழுக்கள் இயங்குவதை பஞ்சாயத்து அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது

Post a Comment

Previous Post Next Post