திருச்சியில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி

 


திருச்சியில் கொரோனாவுக்கு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.

மதுரையை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி. இவர், திருச்சி கிராப்பட்டியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலாம் அணியில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு சளி தொந்தரவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தினார். ஆனால் அதில் நெகடிவ் என ரிசல்ட் வந்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னரும் அவருக்கு சளி-இருமல் பிரச்சினைகள் தொடர்ந்து இருந்துள்ளது. 

இதனால் சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்து உள்ளார். அதில் நுரையீரலில் அவருக்கு அதிக சளி இருந்ததுடன் கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஸ்வரியை சக போலீசார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனாலும் நோய் குணமடையாததால் ராஜேஸ்வரியை மேல் சிகிச்சைக்காக உறவினர்கள் நேற்று முன்தினம் ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு அழைத்துச்சென்றனர். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்ட சில நிமிடங்களில் அவருக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

Previous Post Next Post